இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்தது!

சீனாவின் உகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவது பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 7 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படாததால் நோய் தொற்று தீவிரம் அடைந்துள்ளது.

இந்தியாவிலும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்க பட்டுள்ளதாலும், பரிசோதனைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவில் மொத்தம் 13 லட்சத்து 36 ஆயிரத்து 861 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 48,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 757 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,358 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 8,49,431 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 4,56,071 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,57,117 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,99,967 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 13,132 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 1,99,749 பேருக்கும், டெல்லியில் 1,28,389 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.