நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,607 ஆக உயர்வு

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் நெல்லை மாவட்டத்தில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 2 பேர் வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள்.

நெல்லை மாநகர பகுதியில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், பாளையங்கோட்டை மண்டலத்தில் 25 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்தது. மற்றவர்கள் நெல்லை டவுன், மேலப்பாளையம், தச்சநல்லூர் மண்டல பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

இதுதவிர அம்பை, சேரன்மாதேவி, களக்காடு, மானூர், நாங்குநேரி, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,607-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று வந்த 139 பேர் பூரணகுணம் அடைந்து நேற்று வீடு திரும்பி உள்ளனர். இதில் 63 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். மற்றவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள்.

நெல்லையில் கொரோனாவுக்கு நேற்று மேலும் 2 பேர் பலியானார்கள். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.