சேலம் மாவட்டதில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2, 374 ஆக உயர்வு

சேலம் மாவட்டதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 374 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில், சேலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த வைரசுக்கு 26 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் 1,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 60 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 38 பேர், எடப்பாடியில் 24 பேர், சேலம் ஒன்றியத்தில் 3 பேர், மகுடஞ்சாவடி, வடுகப்பட்டியில் தலா 2 பேர், ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், பேளூர், ஓமலூரில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர நாகை மற்றும் கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் வந்த தலா 2 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் இருந்து சேலம் வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 374 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே 56 பேர் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.