திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியது!

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,774 ஆக உயர்ந்து, 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 670 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 626 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் 88 ஆயிரத்து 377 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட வி.எம் நகரில் 10 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் நேற்று உறுதியானது. கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடுகாடு கிராமத்தில் 2 பேருக்கும், பேரம்பாக்கத்தில் 16 வயது சிறுமி உட்பட 2 பேருக்கும், செஞ்சி, அதிகத்தூர், இருளஞ்சேரி என கடம்பத்தூர் ஒன்றியத்தில் 8 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் நேற்று ஒரே நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் 366 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,774 ஆக உயர்ந்து, 10 ஆயிரத்தை நெருங்கியது. இவர்களில் 6,124 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 3,475 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 175 பேர் பலியாகி உள்ளனர்.