உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 94 லட்சத்தை கடந்தது

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இருப்பினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 94 லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 92 ஆயிரத்து 71 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 37 ஆயிரத்து 788 பேருக்கும், பிரேசிலில் 19 ஆயிரத்து 89 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் 2 கோடியே 94 லட்சத்து 33 ஆயிரத்து 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 72 லட்சத்து 36 ஆயிரத்து 106 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 676 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.