மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் பாஜகவில் இணைந்தார்!

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்த ஒருவர் இன்று பாஜகவில் இணைந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். இவரது கட்சி ஒரு பாராளுமன்ற தேர்தலை சந்தித்து விட்டது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த இரண்டு வாரங்களாக கமல்ஹாசன் செய்து வருகிறார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஆரம்பம் முதலே இருந்தவரும் கமல்ஹாசனின் வலதுகரம் போல் இருந்தவருமான அக்கட்சியின் நிறுவன பொதுச்செயலாளர் அருணாசலம் என்பவர் இன்று திடீரென பாஜகவில் இணைந்துள்ளார்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களின் முன்னிலையில் இன்று அவர் பாஜகவில் இணைந்து உள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே குஷ்பு உள்பட மாற்றுக் கட்சியில் இருந்து ஒருசிலர் பாஜகவில் இணைந்து உள்ள நிலையில் தற்போது கமல் கட்சியிலிருந்தும் ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தது குறித்து விளக்கமளித்த அருணாச்சலம், 'கமலிடம் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளிக்க கேட்டேன், அதற்கு மறுத்தார். விவசாயிகளுக்கு விரோதமான போராட்டத்தில் கலந்து கொண்டார். ஆதலால் பாஜகவில் தொண்டனாக என்னை இணைத்து கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.