பிரதமர் பாதி உண்மை மற்றும் திரிக்கப்பட்ட உண்மை மூலம் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் - மம்தா பானர்ஜி

உழவர் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அடுத்த தவணை நிதியுதவி வழங்குவதை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தனது கொளகைகளால் மாநிலத்தை சீரழித்து விட்டார். இதனால் அம்மாநிலத்தை சேர்ந்த 70 லட்சம்விவசாயிகள் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் பலன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார். இந்நிலையில், பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், பிரதமர் மோடி விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கு பதிலாக தொலைக்காட்சியில் தோன்றி தான் அக்கறை தெரிவிக்கிறார். கிசான் யோஜனா திட்டத்தின் மூலம் தான் விவசாயிகளுக்கு உதவ விரும்புவதாக கூறினாலும், மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என குற்றம் சாட்டுகிறார். இதன்மூலம் அவர் பாதி உண்மை மற்றும் திரிக்கப்பட்ட உண்மை மூலம் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் என்று கூறினார்.

மேலும் அவர், விவசாயிகளின் நலனுக்காக எனது அரசாங்கம் மத்திய அரசுடன் எப்போதும் ஒத்துழைக்க தயாராக இருக்கிறது. ஆனால் அவர்கள் தான் மறுக்கிறார்கள. அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறார்கள். மோடி அரசு மேற்குவங்காள மாநிலத்திற்கு உதவ எதுவும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். வங்காள மக்களின் நலனுக்காக, எங்கள் பங்கிற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம் என தெரிவித்தார்.