இஸ்ரேல் பிரதமரும் சவுதி அரேபிய பட்டத்து இளவரசரும் சந்தித்து பேசியதாக தகவல்

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமலும், அந்நாட்டுடன் பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உள்பட எந்த வித உறவுகளையும் ஏற்படுத்தாமல் இருந்தன. ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சூடான் ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டன.

இஸ்ரேலுடன் சுமூக உறவை மேற்கொள்ளும் வகையில் வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்பட சம்மதம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைனை தொடர்ந்து சவுதி அரேபியாவும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு முறைபயணமாக கடந்த 20-ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இஸ்ரேல் வந்து பின், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திக்க சவுதி பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், மைக் பாம்பியோ சவுதி சென்ற பின்னர் அவரை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனி விமானம் மூலம் ரகசியமாக சவுதி சென்றதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பெஞ்சமின் நெதன்யாகு - முகமது பின் சல்மான் சந்திப்பில் இஸ்ரேல் - சவுதி அரேபியா இடையேயான உறவை சுமூகப்படுத்துவது, அமைதி ஒப்பந்தத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஈரானின் மிகமுக்கிய அணு விஞ்ஞானி நேற்று மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் குற்றம்சுமத்தி வருகிறது. அடுத்தடுத்த நிகழ்வுகளால் அரேபிய வளைகுடா நாடுகளுக்கு இடையே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.