எல்லைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக பொதுமக்கள் ஆலோசனைகளை வழங்கலாம் - டெல்லி முதல்வர்

மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இன்று தொடங்கி உள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

டெல்லியில் இப்போது வரை அனுமதிக்கப்பட்டவற்றைத் தவிர, முடிதிருத்தும் கடைகள், சலூன்கள் மற்றும் அனைத்து கடைகளையும் திறக்கலாம். ஆனால் அழகு நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். ஆட்டோ மற்றும் பிற வாகனங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

டெல்லியின் எல்லைகள் ஒரு வாரம் மூடப்பட்டு சீல் வைக்கப்படும். அனுமதி அட்டை உள்ளவர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எல்லைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக பொதுமக்கள் வெள்ளிக்கிழமைக்குள் தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம்.

வாட்ஸ்அப் எண் 8800007722, delhicm.suggestions@gmail.com என்ற மெயில் மூலமாகவும், 1031 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.