தமிழக அரசின் பொங்கல் பரிசால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ2,500 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருப்பது பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா காலத்தில் தமிழக அரசின் இந்த உதவி இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் கூறி உள்ளனர். மதுரவாயல் நெற்குன்றத்தை சேர்ந்த சங்கீதா, கொரோனா ஊரடங்கினால் உலகமே உருக்குலைந்து அன்றாட தேவைக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் உணவுக்கே கஷ்டப்பட்டனர். கடும் பொருளாதார நெருக்கடிக்கிடையே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.2500 பொங்கல் பரிசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் அறிவித்திருப்பது ஆறுதலான விசயம் என்றே சொல்வேன் என்று கூறியுள்ளார்.

கண்ணன் என்பவர், நான் தி.நகரில் சிறிய கடை வைத்து நடத்தி வருகிறேன். ஊரடங்கினால் மாதக்கணக்கில் கடை திறக்கவில்லை. போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தோம். இந்த சூழ்நிலையில் அரசு ரூ.2500 அறிவித்திருப்பது என்னைப் பொறுத்தவரை எங்களுக்கு ஆறுதல் பரிசு ஆகும். அரசு அதற்காக அறிவித்தது இதற்காக அறிவித்தது என்று ஆராய கூடாது என கூறியுள்ளார். மித்ரா என்ற ஆசிரியை கூறுகையில், இந்த அறிவிப்பு தேர்தலை நோக்கி இருப்பதாக தெரிகிறது. கொரோனாவினால் நிதிச்சுமை அரசுக்கு அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் இலவசங்களை அறிவிப்பதை விட்டுவிட்டு வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது சாலச்சிறந்தது என தெரிவித்துள்ளார்.

பழனி என்பவர், நான் ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். வீட்டில் நாங்கள் 4 பேர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எனக்கு அரசு அறிவித்துள்ள ரூ.2500 பொங்கல் பரிசு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் பரிசாக ரூ.100 கொடுத்தார்கள். கடந்த வருடம் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். கொரோனா பாதிப்பு காரணமாக தொழில்கள் நசிந்து இருந்த நிலையில் தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ.2,500 அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் சேடப்பட்டியைச் சேர்ந்த அபிராமி என்பவர் தெரிவிக்கையில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை விட தற்போதைய தமிழக முதல்வர் மக்களுக்கு அதிக உதவி செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவி அளித்தார். நிவாரண பொருட்கள் மட்டுமின்றி முக கவசம் உள்பட பல்வேறு பொருட்களையும் வழங்கினார். பலர் வேலை இழந்து பண்டிகையை கொண்டாட முடியாத நிலையில் உள்ள மக்களுக்கு அரசு அறிவித்துள்ள ரூ.2500 பரிசு தொகை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. வரும் காலத்திலும் மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமியே வர வேண்டும் என்று கூறியுள்ளார்.