பெண்ணின் நுரையீரலில் சிக்கிய சப்போட்டா விதை... அரசு மருத்துவமனை டாக்டர்கள் அகற்றினர்

திருச்சி: பெண்ணின் நுரையீரலில் சிக்கியிருந்த சப்போட்டா பழத்தின் விதையை திருச்சி டாக்டர்கள் அகற்றினர்.

திருச்சி லால்குடி செம்பாறை கிராமத்தை சேர்ந்தவர் மார்ட்டின் மேரி (50). இவர் கடந்த 2 மாதங்களாக பக்கத்து வீட்டுக்காரரிடம் பேசிக்கொண்டே சப்போட்டா பழத்தை சாப்பிட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சப்போட்டா விதை அவரது மூச்சுக்குழாய் வழியாகச் சென்று நுரையீரலில் நின்றது.

அதன் பிறகு அடிக்கடி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 13ம் தேதி சிகிச்சைக்காக வந்தார். ஸ்கேன் எடுத்து பார்த்ததில், நுரையீரலின் அடியில் சப்போட்டா விதை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த விதையை சுற்றி கொஞ்சம் சதையும் வளர்ந்து அதை மூடி இருந்தது தெரியவந்தது.


இந்நிலையில், கடந்த 15ம் தேதி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் பழனியப்பன், டாக்டர் சுந்தரராமன், மயக்கவியல் நிபுணர் சுரேஷ், தலைமை மயக்க மருத்துவர் சீனிவாசன், மயக்க மருந்து நிபுணர் அடங்கிய குழுவினர், நவீன கருவி மூலம் தொண்டையில் சிறிய துளை போட்டு பாதுகாப்பாக அகற்றினர்.