சரியான பதிலடி கொடுக்க வீரர்கள் முழு அளவில் தயார் நிலையில் உள்ளனர் - பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டே பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசுகையில், இந்தியாவின் நிலையும் எல்லைகளில் அணுகுமுறையும் மாறிவிட்டன. நமது துணிச்சலான வீரர்கள் முழுமையாக ஆயுதம் ஏந்தி, நம் மீது தீய எண்ணத்துடன் கண் வைப்பவர்களுக்கு பொருத்தமான பதிலடி கொடுக்க தயாராக உள்ளனர் என்று கூறினார்.

நமது எல்லைகளில் பாதுகாப்பு எந்திரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது. இன்று இந்தியா தனது பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் கவுரவம் ஆகியவற்றைப் பாதுகாக்க முழுமையாக தயாராக உள்ளது. பயங்கரவாதத்திற்கு ஆதரவாக சில சக்திகள் வெளிப்படையாக வந்துள்ள விதம் உலக அமைதி மற்றும் மனிதநேயத்திற்கான உலகளாவிய கவலை ஆகும் என மோடி கூறினார்.

மேலும் அவர், பயங்கரவாதத்திற்கு உதவுகின்ற மற்றும் ஆதரிக்கும் அனைத்து சக்திகளையும் தோற்கடிக்க அனைத்து நாடுகளும், அரசாங்கங்களும், பிரிவுகளும் ஒன்றுபட வேண்டும். இந்த விஷயத்தில் முன்னெப்போதையும் விட இப்போது ஒன்றுபடுவது அவசியமாகும். உலக நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட வேண்டும். பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் யாரும் பயனடைய கூடாது என்று கூறினார்.

புல்வாமா தாக்குதலின் போது பாதுகாப்புப் படையினர் உயிர்த்தியாகம் செய்த சமயத்தில் சிலர் வருத்தப்படவில்லை என்பதை நாடு ஒருபோதும் மறக்காது. அந்த நேரத்தில், அவர்கள் அரசியல் மட்டுமே செய்து கொண்டிருந்தார்கள். தேச நலனுக்காக இதுபோன்ற அரசியலை செய்ய வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார்