கொரோனா வைரஸ் பரவல் சில நாடுகளில் தீவிர பரவலை எட்டியுள்ளது - டெட்ரோஸ் எச்சரிக்கை

ஜெனீவாவில் நேற்று முன்தினம் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் பேட்டி அளித்தபோது, கொரோனா வைரஸ் தொற்று 1½ கோடி பேருக்கும் மேலாக பாதித்து உள்ளது. 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். எல்லா நாடுகளும் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உலகளவில் கொரோனா பாதித்த 1 கோடி பேர் அல்லது மொத்த பாதிப்பில் மூன்றில் இரு பங்கினர் 10 நாடுகளை சேர்ந்தவர்கள். மொத்த பாதிப்பில் பாதிப்பேர் வெறும் 3 நாடுகளை சேர்ந்தவர்கள்தான். ஆட்சிக்கு தலைமை வகிப்பவர்கள், சமூக ஈடுபாடு உள்ளவர்கள் இரு முக்கிய தூண்களாக இருந்து கொரோனா தொற்றுக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கும், உயிர்களைக் காப்பதற்கும் சிறப்பான வழி உண்டு. தனி நபர்களும், சமூகத்தினரும் தங்கள் சொந்த ஆபத்தை நிர்வகிப்பதற்கும், அவர்களின் சொந்த ஆரோக்கியத்தையும், அவர்களைச்சுற்றிலும் இருப்பவர்களை பாதுகாப்பதற்கான ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட முடிவுகளை எடுக்க வேண்டும் என டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார்.

மேலும் அவர், ஒப்பீட்டளவில் சில நாடுகளில் தீவிரமான பரவலை நாங்கள் தொடர்ந்து பார்க்கிறோம். கொரோனா தொற்று நோய் பல கோடி மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. ஏராளமானோர் மாதக்கணக்கில் வீடுகளில் அடைபட்டுள்ளனர். நாம் பழைய இயல்பு நிலைக்கு திரும்பிவிட முடியாது. புதிய இயல்புக்கு மாறுவது, நமது வாழ்க்கையை பாதுகாப்பாக வாழ்வதற்கான வழியாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.