கொரோனா காலத்தில் 43 சதவீத இந்தியர்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல்

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது முதல் தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

ஊடரங்கு காரணமாக தொழில், வர்த்தக நிறுவனங்கள் மூடலால் மக்கள் வேலை இழப்பு, வாழ்வாதார இழப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில், ‘ஜி.ஓ.கியூ.ஐ.ஐ’ சுகாதார அமைப்பு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. இதில் 43 சதவீத இந்தியர்கள் மன உளைச்சலால் தவிப்பது தெரிய வந்துள்ளது.

மன உளைச்சலுக்கு ஆளான 43 சதவீத இந்தியர்களில் 26 சதவீதத்தினர் லேசான மன உளைச்சலாலும், 11 சதவீதத்தினர் மிதமான மனச்சோர்வாலும், 6 சதவீதம்பேர் தீவிரமான மன உளைச்சலாலும் தவிப்பதாக ஜி.ஓ.கியூ.ஐ.ஐ’ சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த ஆய்வின் முடிவில், மன உளைச்சல் அதிகரிக்கிறபோது அது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும், தற்போது ஊரடங்கு மற்றும் வாழ்க்கை முறைகள் கடுமையாக மாறி வருகின்றன. இதனால் 43 சதவீத இந்தியர்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை சமாளிக்கவும் அவர்கள் தற்போது கற்றுக்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது.