அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்... டென்ஷனில் முதல்வர் கெஜ்ரிவால்

புதுடில்லி: அரசியல் உள்நோக்கம் கொண்டது... டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக தனக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மன், சட்டவிரோதமானதும் அரசியல் உள்நோக்கம் கொண்டதும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. வலியுறுத்தலின் பேரிலேயே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் 4 மாநிலங்களில், தான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதைத் தடுக்கவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அமலாக்கத்துறைக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராகவும் தான் இருப்பதால், விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் களப்பணி ஆற்ற வேண்டிய கடமை உள்ளதாகக் கூறியுள்ளார்.

டெல்லியின் முதல்வராக, ஆட்சியும் அதிகாரபூர்வ கடமைகள் இருப்பதாகவும், குறிப்பாக தீபாவளி பண்டிகை காலம் என்பதால், மாநிலத்திற்கு தனது பணி அவசியம் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சம்மனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அமலாக்கத்துறையை கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.