குறுகிய மனநிலை கூடாது... மனுதாரரை கண்டித்தது உச்ச நீதிமன்றம்

புதுடில்லி: குறுகிய மனநிலை கூடாது... பாகிஸ்தானை சேர்ந்த கலைஞர்கள், இந்தியாவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நிரந்தர தடை விதிக்கக்கோரி முறையிட்ட மனுதாரரை கண்டித்த உச்சநீதிமன்றம், இப்படிப்பட்ட குறுகிய மனநிலை கூடாது என்று தெரிவித்தது.

மகாராஷ்டிராவை சேர்ந்த நடிகர் அன்வர் குரோஷி என்பவர் தொடர்ந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி எஸ்.வி.என். பாட்டி அடங்கிய அமர்வு, மனுதாரரை கடுமையாக விமர்சித்தது. உண்மையான தேசபக்தி கொண்ட நபர், சுயநலமற்றவராக இருக்க வேண்டும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதநல்லிணக்கத்தை பேணும் நிகழ்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். அதிலும் அண்டை நாடுகளில் இருந்து நிகழ்ச்சி நடத்த வரும் கலைஞர்களை மனமுவந்து வரவேற்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கலை, இசை, விளையாட்டு உள்ளிட்டவை தேசம் கடைந்தவை என்றும் நீதிபதிகள் கூறினர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்றதை சுட்டிக்காட்டிய அவர்கள், இந்திய அரசு எடுத்த பாராட்டத்தக்க நடவடிக்கை இது என்றும் தெரிவித்தனர்.