ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டதாக தகவல்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்கனவே வர்த்தக மோதல் நிலவியது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக மேலும் மோதல் போக்கு அதிகமாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் குறித்து அமெரிக்கா சீனா மீதும், சீனா அமெரிக்கா மீதும் மாற்றி மாற்றி குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் சீனாவால் அச்சுறுத்தப்படும் அண்டை நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருவதால், அமெரிக்கா மீது சீனா கடும் கோபத்தில் உள்ளது. இந்தியாவுடனான லடாக் எல்லை மோதலிலும் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.

தற்போது ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தின் முன்பு வைத்து முக்கியமான டாக்குமென்ட்கள் எரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் அங்கு சென்றனர்.

இந்நிலையில் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூடுவதற்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக பீஜிங்கில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது. இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்து அமெரிக்கா சார்பில் எந்த அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்படவில்லை.