இன்று ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர்

டெல்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று இந்தியா வருகிறார். இருநாட்டு உறவு, பாதுகாப்பு , ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இந்தியாவுக்கு வருகிறார். இதனை அடுத்து இந்தியா வரும் ஜோ பைடன் பிரதமர் நரேந்திர மோடியை இன்று இரவு 7:45 மணியளவில் சந்திக்கிறார்.

நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கும் ஜி 20 மாநாட்டில் சர்வதேச பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பாத்திரங்களில் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து ஜோ பைடனின் இந்தியா வருகை ஒட்டி அவருக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. பைடன் மற்றும் அமெரிக்க பிரதிகள் தங்குவதற்காக டெல்லியில் உள்ள ஐடிசி ஹோட்டலில் 400 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. 14-வது தளத்திற்கு செல்வதற்காக பிரத்யேக லிப்ட் வசதி செய்யப்பட்டு உள்ளது.