மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் குறைய தொடங்கியது

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. அதாவது அதிகபட்சமாக வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

நேற்றுமுன்தினம் அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரத்து 274 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 9 ஆயிரத்து 432 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 12 ஆயிரத்து 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அணைக்கு வரும் நீர்வரத்தை விட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் குறைய தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் 95.46 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 95.21 அடியாக குறைந்துள்ளது.