அமெரிக்க வீரர்களை கொன்றால் தலிபான்களுக்கு ரஷியா உதவி செய்வதாக வெளியான செய்திக்கு பதிலளிக்க வெள்ளை மாளிகை மறுப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. இதில் அரசு படைகளுக்கு ஆதரவாக அங்கு அமெரிக்கா படைகள் உள்ளன. இந்நிலையில், அமெரிக்க படைகளை குறிவைத்து தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதல் காரணமாக 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமான அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதன்பின், தலிபான்களுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப்பெற அமெரிக்கா முடிவு செய்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படை வீரர்களை தலிபான் பயங்கரவாதிகள் கொன்றால் அவர்களுக்கு ரஷிய உளவு அமைப்பு ஆயுதம், பண உதவி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியானது. இந்த செய்தி அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குறித்து மார்ச் மாதமே அதிபர் டிரம்ப் பேட்டி அளித்தபோது, குழப்பம் ஏற்பட்டதால் அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்ததாக நியூயார்க் டைம்சில் செய்தி வெளியானது.

தற்போது அமெரிக்க படைகளை தலிபான்கள் கொன்றால் பயங்கரவாதிகளுக்கு ரஷிய உளவு அமைப்பு பணம், ஆயுத உதவி வழங்குவதாக வெளியான செய்திக்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. மேலும், அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்த நாங்கள் தயாரித்த ஆயுதங்களையே பயன்படுத்துவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.