கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை ஆசிரியர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள்

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை ஆசிரியர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து ‘ஜாக்டோ-ஜியோ’ கூட்டமைப்பாக செயல்படுகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி நிலுவைத்தொகை, ஊதிய முரண்பாடுகளை நீக்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடர்கிறது. கடந்த ஆட்சியில் நடந்த போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு அளித்தார்.


இதனால், தி.மு.க., ஆட்சி வந்ததும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என, ஆசிரியர் சங்கங்கள் எதிர்பார்த்தனர். ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றே முக்கால் ஆண்டுகள் ஆகியும் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

எனவே, அரசை கண்டித்து ஜாக்டோ-ஜியோ தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளது. மார்ச் 5ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டமும், 24ல் மனித சங்கலி போராட்டமும் நடைபெறும்.இதற்கான ஆயத்த மாநாடு பிப்ரவரி 12ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படும். இந்நிலையில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகமும் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

45 ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வே இல்லாத மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கிட விதிகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும். மாணவர்களின் தரம் மேம்பட, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் பணிகளில் மட்டும் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

இ.எம்.ஐ.எஸ்., நலத்திட்டங்களை செயல்படுத்த தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், ஆசிரியர் பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.


அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் ஊதிய விகிதத்தில் ஒரே மாதிரியாக இருப்பதால், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணிபுரிந்த காலத்தைக் கணக்கில் கொண்டு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குத் தேர்வு நிலை வழங்க வேண்டும்.


அனைத்து பள்ளிகளுக்கும் அடிப்படை பணியாளர்களை அமைச்சகம் நியமிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.