கொலை வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது; சாத்தான்குளம் விவகாரத்தில் நீதிமன்றம் கருத்து

சாத்தான்குளம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதாகவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது

கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக சாத்தான்குளத்தில் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 19ம் தேதி இரவு போலீசார் கைது செய்தனர். பின்னர், கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு சாத்தான்குளம் காவலர்கள்தான் காரணம் என்றும், இருவரையும் காவலர்கள் அடித்து துன்புறுத்தியதாக அடுக்கடுக்கான குற்றம்சாட்டினர்.

இதனிடையே, சிசிடிவி காட்சிகளும் போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொய்யானவை என்பதை உறுதி செய்தன. இதைத் தொடர்ந்து, சாத்தான்குளம் காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மேலும், தந்தை மற்றும் மகனின் பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் இருவரின் உடலில் மோசமான காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், எனவே, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதாகவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது. இந்த வழக்கில் ஒரு நிமிடம் கூட வீணாக்க விரும்பவில்லை என்றும் மதுரை நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.