பட்டமளிப்பு விழாவில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டு இருந்த பலூன்கள் வெடித்தால் பரபரப்பு

தஞ்சாவூர்: பட்டமளிப்பு விழாவில் வெடித்த பலூன்... தஞ்சை மருத்துவக் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அலங்காரத்திற்கு வைக்கப்பட்டு இருந்த பலூன்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ பிளம்பு கிளம்பியதால் அருகில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதனால் விழா அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திறந்த வெளியில் நடந்தது. மாலை 4 மணிக்கு விழா துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

பட்டம் பெறும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 102 டிகிரி வெயிலில் வெட்ட வெளியில் சிறுவர்கள், முதியவர்கள் அடித்த வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் தலையில் துணியை போட்டுக் கொண்டும், குடை பிடித்தும் மயங்கி விழாத குறையாக உட்கார்ந்து இருந்தனர்.

பட்டம் பெற ஆர்வமுடன் வந்த மாணவிகள் வெயிலில் உட்கார்ந்து உடல் சோர்ந்து போய் பட்டம் பெற்றனர். முன்னதாக, விழா தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்ற சிறப்பு விருந்தினர்கள் பல முறை முயற்சித்தும் காற்றின் வேகத்தில் ஏற்ற முடியாமல் தோல்வி அடைந்து குத்து விளக்கு ஏற்றாமலேயே விழாவை தொடங்கினார்கள்.

மேலும், முக்கிய விருந்தினர்கள் பேராசிரியர்கள், விழா மேடைக்கு சிவப்பு கம்பள விரிப்பில் நடந்து மேடைக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது, அலங்காரத்திற்கு வைக்கப்பட்டு இருந்த பலூன்கள் வெடித்து பயங்கர சத்தத்துடன் தீ பிளம்பு வெளியேறியது. இதனால், அருகில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் எடுத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.