இன்று ரக்சா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது

இன்று ரக்சா பந்தன் பண்டிகை... சகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின் பாச பந்தம்தான் அண்ணன்-தங்கை உறவு. ஒரு தாய் வயிற்றில் பிறந்து ஒன்றாக வளர்ந்து, அன்புக்கும் அரவணைப்புக்கும் பிணைப்புக்கும் ஆளாகும் உறவை, மேலும் பலப்படுத்தி இனிக்க வைக்கும் திருவிழா ரக்சா பந்தன்.

தீய விஷயங்கள் மற்றும் செயல்களில் இருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக சகோதரிகள் பிரார்த்தனை செய்வதற்காகவும் ஆண்டுதோறும் ஆவணி மாதம் பவுர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது.

பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் அல்லது ராக்கி கட்டி மகிழ்கின்றனர். தாங்கள் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ ஆரத்தி எடுத்து திலகமிட்டு வாழ்த்தும் வளைக்கரங்களுக்கு, சகோதரர்கள் பரிசுகளைக் கொடுத்து மகிழ்விக்கின்றனர். ஆண்டுதோறும் ரக்சா பந்தன் பண்டிகை வந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் வயது கூடிக்கொண்டே போனாலும் அன்புக்கு மட்டும் வயதாவதே இல்லை.