திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்... குளிக்க தடை விதிப்பால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திற்பரப்பு அருவி விளங்குகிறது. இங்கு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நீச்சல் குளம், சிறுவர் பூங்கா, படகு போக்குவரத்து போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அருவியின் அருகே 3-வது சிவாலயமான மகாதேவர் கோவில் உள்ளது.

திற்பரப்புக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் நீச்சல் குளத்தில் குளிப்பதோடு படகு தளத்தில் படகு சவாரி செய்து மகிழ்வார்கள். மேலும், அருகில் உள்ள மகாதேவர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்புவார்கள்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக திற்பரப்புக்கு வந்தனர். அவர்கள் அருவிக்கு சென்று குளிக்க முற்பட்டனர். ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பேரூராட்சி ஊழியர்கள் சுற்றுலா பயணிகளை நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால், அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியில், ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள் தொலைவில் நின்று அருவியின் அழகையும், பாறைகளின் இடையே தண்ணீர் பாய்ந்து செல்வதையும் பார்த்து ரசித்துவிட்டு திரும்பினர்.