நீட்-2020 போட்டித் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு ஆன்லைனில் துவங்கியது!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட்-2020 போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பினை துவங்கி வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீட் போன்ற போட்டித் தேர்வுகளை மாணவ, மாணவியர் எவ்வித தயக்கமும், தளர்வும் இல்லாமல், உறுதியான எண்ணத்தோடு எதிர்கொள்ளும் வகையில், தமிழக அரசு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தனித்துவம் மிக்க பயிற்சி அளிக்கும் திட்டத்தினை 2017-ம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட் போட்டித் தேர்விற்கான பயிற்சியை அளித்திடும் வகையில், ஆன்லைனில் கட்டணமில்லா பயிற்சியினை வழங்கிட ஆம்பிசாஃப்ட் டெக்னாலஜிஸ் (E-box) நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இப்பயிற்சியினை பெற இதுவரை 7,420 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஆம்பிசாஃப்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தால் இணையதளம் மூலமாக, ஒவ்வொரு நாளும் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கு தலா 1 மணி நேரம் வீதம், 4 மணி நேர பயிற்சியும், பயிற்சி முடித்தவுடன் அன்றைய தினமே ஒவ்வொரு பாடத்திற்கும் 1 மணி நேரம் வீதம், 4 மணி நேரம் பயிற்சித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

மேலும், 80 பயிற்சி தேர்வுகள், 80 வளரரித் தேர்வுகள், 5 அலகுத் தேர்வுகள், 12 திருப்புதல் தேர்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.