ட்விட்டர் நிறுவனத்தின் இரண்டு இந்திய அலுவலகங்கள் மூடல்

புதுடில்லி: ட்விட்டர் நிறுவனத்தின் இரண்டு இந்திய அலுவலகங்கள் மூடப்பட்டு அதன் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது ஊழியர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதிலிருந்து நாளொரு மேனியும் பொழுதொரு பிரச்சனையுமாக மிகவும் பரப்பரப்பு செய்திகளுமாக வலம் வந்துக் கொண்டே இருக்கிறது.

ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதில் இருந்தே, அதன் ஊழிர்களையும், பயனர்களையும் எலான் மஸ்க் மிகவும் பரபரப்பாக வைத்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு ட்விட்டரின் சிஇஓ இனி இவர் தான் என எலான் மஸ்க் தனது செல்லபிராணியான நாயை அறிமுகப்படுத்தி உலகையே பரபரப்புக்குள்ளாகினர்.

இது ட்விட்டர் பயனாளிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி உரிமையாளரானதை தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

தற்போதைய அதிரடி நடவடிக்கையாக ட்விட்டர் நிறுவனத்தின் மூன்று இந்திய அலுவலகங்களில், இரண்டு அலுவலகங்கள் மூடப்பட்டு அதன் பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். செலவுகளை குறைக்கும் எலான் மஸ்க்கின் திட்டப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ட்விட்டர் அலுவலகங்கள் மூடப்பட்டு, பெங்களூருவில் உள்ள அலுவலகம் மட்டும் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் பணியாற்றிய ட்விட்டர் நிறுவனத்தின் 90 விழுக்காடு பணியாளர்கள், அதாவது 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களை மூடிவிட்டு பெங்களூர் அலுவலகத்தை மட்டும் இயக்க முக்கிய காரணம், பெங்களூர் தொழில்நுட்ப மையத்தில் பெரும்பாலும் பொறியாளர்களைக் கொண்ட அலுவலகம் என்பதால் தொடர்ந்து இயக்குகிறது.