கொரோனா பரவலால் திருகோணமலையில் இரு பகுதிகள் முடக்கம்

இரு பகுதிகள் முடக்கம்... திருகோணமலையில் கொரோனா வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

இதன்படி, திருகோணமலை மாவட்டத்தின் அபயபுர கிராமசேவகர் பிரிவில் ஒரு பகுதியும் ஜின்னா நகரில் ஒரு பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இந்த முடக்கம், இன்று காலை ஆறுமணி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த பகுதிகளின் பிரதான வீதி ஊடான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் தனிமைப்படுத்தல் பகுதிகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இன்று மட்டும் 588 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 228ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 686 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 30 ஆயிரத்து 568 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.