இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிய 2 நபர்கள் சுட்டுக்கொலை

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் எப்போதும் தீவிர பாதுகாப்பு பணியில் இருப்பர். எல்லைப்பகுதி வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் சம்பவம் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். மேலும் எல்லைகப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலும் நடத்துவர்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் டர்ன் டரன் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் டால் முகாம் அருகே 2 நபர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடி கொண்டிருந்தனர்.

சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடி கொண்டிருந்த 2 பேரை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். பின்னர் உஷாரான வீரர்கள், அந்த நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் 2 பேரும் உயிரிழந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இறந்த அந்த நபர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. அதனை தொடர்ந்து அப்பகுதியில் வேறு யாரும் உள்ளனரா என தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கொல்லப்பட்ட நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் காரணமாக அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.