இந்தியா முழுவதும் உள்ள 736 அணைகளை வலுப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றபின், மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் பேட்டி அளிக்கையில், நாட்டில் 5 ஆயிரத்து 334 பெரிய அணைகள் உள்ளன. 80 சதவீத அணைகள், 25 ஆண்டுகள் பழமையானவை. சில அணைகள், 100 ஆண்டுகள் பழமையானவை. எனவே, அவற்றை நன்கு பராமரிப்பதும், பலப்படுத்துவதும் அவசியம். அதற்காக அணை மறுசீரமைப்பு மற்றும் மேம்படுத்தும் திட்டம் உருவாக்கப்பட்டது என்று கூறினார்.

முதல்கட்டத்தில், 7 மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட 223 அணைகளை மறுசீரமைக்கும் பணி, கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கியது. இந்த ஆண்டு முடிவடைந்தது. தற்போது 2-வது மற்றும் 3-வது கட்டமாக, 19 மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளை மறுசீரமைக்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.10 ஆயிரத்து 211 கோடி செலவில், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இத்திட்டம் மேற்கொள்ளப்படும். இதில், 80 சதவீத நிதியை உலக வங்கியும், மற்றொரு அமைப்பும் அளிக்கும் என கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்தார்.

அதன்பின் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அளித்த பேட்டியில், சணல் மூட்டைகளை கட்டாயம் பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 100 சதவீத உணவு தானியங்களையும், 20 சதவீத சர்க்கரையையும் சணல் மூட்டைகளில் அடைத்து வினியோகிப்பதை கட்டாயமாக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இந்த முடிவு, சணல் தொழிலுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும். கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சணல் பயிரிடும் விவசாயிகளுக்கும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் பலன் அளிக்கும் என்று கூறினார்.

மேலும் அவர், எத்தனால் விலையை லிட்டருக்கு ரூ.3.34 வரை உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. மருத்துவ துறையில் ஒத்துழைப்பது தொடர்பாக கம்போடியா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. தாய்-சேய் நலம், குடும்ப கட்டுப்பாடு, எய்ட்ஸ், தொழுநோய், பொது சுகாதாரம், தொற்றுநோய் கட்டுப்பாடு, மருத்துவ ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் இந்த ஒத்துழைப்பு செயல்படுத்தப்படும். கையெழுத்தான நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு இது அமலில் இருக்கும் என்று கூறினார்.