15.76 லட்சம் எண்ணெய் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைத்த உத்தரபிரதேசம்

அயோத்தியா :உத்தரபிரதேச மாநிலம் இந்த ஆண்டு 15.76 லட்சம் எண்ணெய் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு பிரதமர் மோடி, பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.

உத்தரபிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக மீண்டும் 2வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு 6வது முறையாக தீபாவளி பண்டிகையை கொண்டாடும் பணி மும்முரமாக நடந்து வந்தது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தீபாவளியன்று கின்னஸ் சாதனை முயற்சிக்கான ஏற்பாடுகளை செய்தது.

அதன்படி, அயோத்தி நகரில் மேலும் 15 லட்சம் விளக்குகள் ஏற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக அயோத்தி, லக்னோ, கோண்டா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மண் விளக்குகள் வாங்கும் பணியும் நடந்தது. கடந்த 5 ஆண்டுகளைப் போலன்றி, இந்த ஆண்டு 30 நிமிடங்களுக்கு மேல் இந்த விளக்குகள் எரியும். நீண்ட நேரமாக மின்விளக்குகள் எரிவதை மக்கள் பார்க்கின்றனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன், விளக்குகள் விரைவாக அணைந்துவிடும். இதனால், மக்கள் ஒளியின் பிரமிப்பைப் பார்க்க முடியவில்லை. விளக்குகளை நீண்ட நேரம் எரிப்பதற்கு தலா 40 மி.லி. விளக்கில் எண்ணெய் ஊற்றப்படுகிறது. கடந்த ஆண்டு, அயோத்தி நகரில், 9 லட்சம் மண் விளக்குகளை ஏற்றி, கின்னஸ் சாதனை படைத்தது.


இதை முறியடிக்கும் வகையில், இந்த ஆண்டு 15.76 லட்சம் எண்ணெய் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு பிரதமர் மோடி, பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. பிரதமர் மோடி விழாவை துவக்கி வைத்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.


ஆவாத் பல்கலைக்கழகத்தின் ஏராளமான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இந்த சாதனையை நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த சாதனையை பாராட்டி கின்னஸ் உலக சாதனை அமைப்பின் பிரதிநிதிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இதற்கான சான்றிதழை முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கினார். இந்த சாதனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.