நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் கமலை எதிர்த்து வானதி சீனிவாசன் போட்டி?

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் மீண்டும் போட்டியிட கமல் தயாராகி வருகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி சீனிவாசனை களமிறக்க திட்டம் தீட்டப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதே சமயம் ஒவ்வொரு கட்சியை சேர்ந்த பிரபலங்களும் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை குறிவைத்து செயல்பட துவங்கியுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அவர் கோவை தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் யார்? என்று கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
வரும் தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் களம் இறங்கினால் வெற்றி எளிதானது என்று கமல்ஹாசன் கருதுகிறார். கோவை மக்களை கவரும் வகையில் சமீபத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட தனியார் பேருந்தின் பெண் டிரைவரை அழைத்து அவருக்கு சொந்தமாக புதிய கார் வாங்கி கொடுத்தார்.
கோவை தொகுதியை குறிவைத்து கமல்ஹாசன் காய்களை நகர்த்தி வருவதால் கமல்ஹாசன் போட்டியிடுவது உறுதி என்று கூறப்படுகிறது. கமல்ஹாசன் போட்டியிட்டால் அவரை எதிர்த்துப் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் யார் என்பதுதான் இப்போதைய கேள்வி.
கடந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்றுள்ளார். கமல்ஹாசனுக்கு எதிரான வேட்பாளர் தொகுதியில் நன்கு அறியப்பட்டவராக இருக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் கருதுகிறது.

மேலும், தமிழகத்தில் பா.ஜ.க., வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் கோவையும் ஒன்றாக கருதி, வலுவான வேட்பாளரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். வானதி சீனிவாசன் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார். இருப்பினும் அவரை மீண்டும் களமிறக்க கட்சி மேலிடம் விரும்புவதாக கூறப்படுகிறது.