தொடர் மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைவு; மதுரையில் காய்கறிகள் விலை உயர்வு

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணியில் மத்திய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் திறக்கப்படுவது இல்லை. இதேபோல் பரவை காய்கறி மார்க்கெட்டில் தமிழ் மாதத்தின் கடைசி சனிக்கிழமைகளில் கடைகள் திறக்கப்படுவது இல்லை.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி ஆவணி கடைசி சனிக்கிழமை என்பதால் தோப்பூர் அருகே இயங்கி வரும் பரவை காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் பரவை காய்கறி மார்க்கெட்டுக்கு வரவேண்டிய காய்கறி சரக்கு வாகனங்கள் வரவில்லை. அதேபோல், தமிழ் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் திறக்கப்படாததால் அங்கும் காய்கறி வரத்து இல்லை.

மேலும் தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்கு பயிரிடப்பட்டு இருந்த தக்காளி மற்றும் கத்தரி செடிகள் மூழ்கிவிட்டன. இதனால் அங்கிருந்து காய்கறிகள் வருவதில் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் இன்று ரூ.60 ஆகவும், கிலோ ரூ.40-க்கு விற்ற கேரட் ரூ.50 ஆகவும், கிலோ ரூ.40-க்கு விற்ற முருங்கை, பீன்ஸ் ரூ.80 ஆகவும் விலை உயர்ந்தது. இதேபோல் அனைத்து காய்கறிகளும் ரூ.10 முதல் ரூ.20 வரை விலை உயர்ந்துள்ளன.