ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு

சென்னை: நாளை தீர்ப்பு?... அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை (புதன்கிழமை) தீர்ப்பளிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் நாளை தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக இபிஎஸ் அறிவித்தார்.

மேலும் அந்நாளில் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு மோதலில் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அலுவலகத்தின் சாவி இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்ட முடிவுகள் செல்லுமா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.