நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக விஜய்மல்லையாவுக்கு 4 மாத சிறை

புதுடில்லி: விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை... நீதிமன்ற உத்தரவை மீறியதாக, தொழிலதிபர் விஜய் மல்லையா மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு மாத சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல வங்கிகளில், 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக, 'கிங்பிஷர்' நிறுவனத்தின் தலைவரான தொழிலதிபர் விஜய் மல்லையா மீது வழக்குகள் தொடரப்பட்டன.இதற்கிடையே, 2016 மார்ச் மாதம் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு அவர் தப்பிச் சென்றார்.

அவர் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவில், விஜய் மல்லையா தன் செயலுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. மேலும் வழக்கை இழுத்தடிப்பு செய்வதற்கான முயற்சிகளிலேயே அவர் ஈடுபட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு, நான்கு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்குள் அவர் அதை செலுத்தாவிட்டால், மேலும் இரண்டு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, தன் குடும்பத்தாருக்கு மாற்றிய, 317 கோடி ரூபாயை வட்டியுடன், நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால், அதை மீட்பதற்கான நடவடிக்கைகளில் வங்கியின் கடன் மீட்பு அதிகாரிகள் ஈடுபடலாம். இதற்கு மத்திய அரசும், அதன் அமைப்புகளும் உதவிட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.