அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை

அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டிரம்பை விட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ஆனால் ஜனாதிபதி டிரம்ப் இன்னமும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறார். ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.

தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க கோரி டிரம்ப் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டும் தள்ளுபடி செய்தது. இதன் மூலம் அவரது சட்ட போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால் அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற தயாராகிவிட்டார். ஆனாலும் டிரம்பின் வலதுசாரி ஆதரவாளர்கள் டிரம்புக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் பல மாகாணங்களில் அவர் திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டதாகவும் கூறி தொடர்ந்து பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் டிரம்பின் ஆதரவாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தலைநகர் வாஷிங்டனில் பெரும் திரளாக திரண்டு பேரணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், வெள்ளை மாளிகைக்கு அருகே இனவெறிக்கு எதிரான ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்ற அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் டிரம்புக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டிரம்ப் ஆதரவு பேரணி வெள்ளை மாளிகையை கடந்த போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது.

இரு தரப்பை சேர்ந்தவர்கள் கையில் கிடைத்த பொருட்களால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். மேலும் ஒரு சிலர் கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தினர். அங்கு வந்த கலவர தடுப்பு போலீசார் தடியடி நடத்தி இரு தரப்பையும் கலைக்க முற்பட்டனர். ஆனால் இரு தரப்பை சேர்ந்தவர்கள் போலீசாரையும் சரமாரியாக தாக்கினர். இந்த வன்முறையில் போலீசார் உள்பட 8 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 2 போலீசார் உள்பட 4 பேருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வன்முறை காரணமாக வாஷிங்டனில் நீண்ட நேரம் பதற்றம் நிலவியது.