புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ...சென்னை தலைமை செயலகத்தில் முன்னேற்பாடு

சென்னை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க கூட்டணி) வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

எனவே நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குசீட்டு முறையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதனால் சென்னை தலைமைச் செயலகம் அந்த வகையில் தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து இன்று நடக்கும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

இதை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க உள்ள ஓட்டுப்பெட்டி கடந்த 12-ந்தேதி பாதுகாப்புடன் விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை தலைமைச் செயலகத்துக்கு கொண்டு வரப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் சட்டசபை வளாகத்தில் உள்ள குழு கூட்ட அறையில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேலும் ஓட்டு போடும் மேஜையை அடைவதற்கு முன்பு 3 அலுவலர்கள் உட்கார நாற்காலி மற்றும் மேஜைகள் சற்று தூரத்தில் போடப்பட்டுள்ளன. ஓட்டு போட வருவோரின் அடையாள அட்டையை ஒரு அலுவலர், பெயர் பட்டியலுடன் சரிபார்ப்பார். பின் வாக்குச்சீட்டை மற்றொரு அலுவலர் வழங்குவார். இத்தேர்தலை நடத்துவதற்காக உதவி தேர்தல் அதிகாரியாக சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் நியமிக்கப்பட்டு உள்ளார். 2 வேட்பாளர்களுக்கும் தலா 3 முகவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்