செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புவதை அடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புகிறது. இதையடுத்து அதிகாரிகள் அலர்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையின் நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகிறது. எந்த நேரமும் திறந்து விடப்படலாம் என்பதால் பொதுப்பணி துறை ஊழியர்களை அதிகாரிகள் அலர்ட் செய்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடி. தற்போது 20 அடியை தாண்டி உள்ளது.

எப்போதும் ஏரியில் 21 அடியை நீர் தொட்டதும் உபரிநீர் திறந்து விடப்படுவது வழக்கம். தற்போது ஏரியில் 20.10 அடியை நெருங்கியது. இதனால் ஏரியில் நீர் திறந்து விடப்படும் போது கோட்டூர்புரம், அடையாறு கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 2015 ல் செம்பரம்பாக்கம் ஏரியில் எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென மொத்தமாக திறந்து விடப்பட்டதால் சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. இதில் பலர் பாதிக்கப்பட்டனர். இதனால் இப்போது கடந்தகால நிகழ்வு போல் ஏதும் நடவாமல் தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுபோல் சென்னை பூண்டி ஏரியிலும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. இன்னும் சென்னையில் மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.