தலிபான் பயங்கரவாதிகள் மீது போர் விமானங்கள் தாக்குதல்

தலிபான் பயங்கரவாதிகளின் நிலைகள் மீது போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கட்டார் தலைநகர் டோஹாவில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இராணுவ வீரர்களையும் பொலிசாரையும் குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதற்குப் பதிலடியாக இராணுவமும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள வார்டாக் மாகாணத்தின் சயீத் அபாத் மாவட்டத்தில் இராணுவம் அதிரடி வான் தாக்குதலை நடத்தியது.

தலிபான் பயங்கரவாதிகளின் நிலைகள் மீது போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் தலிபான் பயங்கரவாதிகள் 17 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இதேவேளை, பல பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர். அதுமட்டுமின்றி பயங்கரவாதிகளின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டன.