மருத்துவமனையில் சுயநினைவற்ற நிலையில்தான் சேர்க்கப்பட்டாராம் ஜெயலலிதா?

சென்னை: ஆணையம் அறிக்கையில் தகவல்... மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சுயநினைவை இழந்தது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்னரே ஜெயலலிதா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். ஜெயலலிதாவின் தனிப்பட்ட மருத்துவர் சிவக்குமார் பரிந்துரைப்படி, பாராசிட்டமால் மாத்திரையை அவர் உட்கொண்டதும் தெரியவந்தது.

2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி கேள்வியுற்ற மருத்துவர் சிவக்குமார். மாலை 4 மணிக்கு போயஸ் கார்டன் வந்ததுள்ளார். ஆனால் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை நேரடியாக பரிசோதிக்காமல் அவர் திரும்பியுள்ளார். பின்பு அன்றே இரவு 8.45 மணிக்கு மருத்துவர் சிவக்குமார் மீண்டும் போயஸ் கார்டன் வந்த போது, அப்போது இருமலால் அவதிப்பட்டு வந்த ஜெயலலிதா சசிகலாவுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

பிறகு குளியலறைக்கு பல்துலக்க சென்றிருந்த ஜெயலலிதா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த சசிகலா அங்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் அதையடுத்து படுக்கையறைக்கு வந்த ஜெயலலிதா திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவர் விழுந்த போது சசிகலா மற்றும் சிவக்குமார் தாங்கி பிடித்துள்ளனர். பின்னர் அப்போலோ மருத்துவமனைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அப்போலோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டன் வந்த மருத்துவ குழு அவருக்கு படுக்கையில் ஆக்சிஜன் செலுத்தி, 9.45 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது. இரவு 10.15க்கு அப்போலோ மருத்துவமனையில் சுயநினைவற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. இத்தகவல்கள் ஆணையத்தின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.