யாழ்ப்பாணம் வந்த இந்திய அரசின் உயர்மட்டக்குழுவினருக்கு வரவேற்பு

யாழ்ப்பாணம்: இந்திய அரசின் உயர்மட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று (வியாழக்கிழமை) மதியம் பலாலி சர்வதேச விமானத்தை வந்தடைந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை தலைமையிலான இந்திய அரசின் உயர்மட்ட குழுவினருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், யாழ். இந்திய துணைத் தூதுவர், சிவசேனை அமைப்பின் தலைவர் ஆகியோர் இந்திய உயர்மட்ட குழுவினை மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

இந்திய அரசின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இணை அமைச்சர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.