சந்திராயன் லேண்டர் இறங்கியபோது 2 டன் மண் துகள் மேலெழும்பியதாக தகவல்

ஐதராபாத்: இஸ்ரோ தெரிவித்த தகவல்... நிலவில் சந்திரயான் லேண்டா் கலன் தரையிறங்கும்போது 2.06 டன் மண் துகள்கள் மேலெழும்பி 108.4 மீட்டா் பரப்பளவுக்கு பிரகாசமான தரைப்பரப்பு (எஜெக்டா ஹாலோ) உருவானதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவம் அருகே தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டா் கடந்த ஆக. 23-ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

மொத்தம் 14 நாள்கள் லேண்டரும், ரோவரும் நிலவின் மேற்பரப்பையும், ரசாயனத் தன்மைகளையும் ஆய்வு செய்து பல்வேறு அரிய தகவல்களைத் திரட்டின.

லேண்டரை தரையிறக்கும்போது நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் இஸ்ரோ பதிவிட்ட தகவலில், பொதுவாக விண்கலனை நிலவில் தரையிறக்கும்போது மேற்பரப்பில் உள்ள மண், துகள்கள் புழுதிபோன்று மேலெழுவது இயல்பு.

அந்த வகையில், சந்திரயான் லேண்டா் கலன் இறங்கும்போதும் 2.06 டன் மண் மற்றும் ரசாயனத் துகள்கள் வெளியேறி 108.4 மீட்டா் பரப்பளவுக்கு தெளிவான தரைப்பரப்பு உருவானது என்று தெரிவித்துள்ளது.