போராட்டம் நடத்த எங்களுக்கு அனுமதி தடுக்கப்படுவது ஏன்? - குஷ்பு கேள்வி

சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து இன்று பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா, ராகவன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொள்ள இருந்தனர். இருப்பினும் சிதம்பரத்தில் பாஜக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

தொல்.திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு சிதம்பரம் நோக்கி காரில் பயணம் மேற்கொண்டார். அவரை முட்டுக்காடு அருகே தடுத்து நிறுத்திய போலீசார் தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்க சென்றதற்காக குஷ்புவை கைது செய்தனர்.

தற்போது கைது செய்யப்பட்டது தொடர்பாக குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், கைது செய்யப்பட்டுவிட்டேன்.... போலீஸ் வாகனத்தில் ஏற்றிச்செல்கின்றனர். பெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம். பிரதமர் மோடி எப்போதும் பெண்களின் பாதுகாப்பு பற்றியே பேசுவார். அவரின் பாதையில் செல்வோம். கோழைகள் விடுதலை சிறுத்தைகள். மகிழ்ச்சியில் இருக்காதீர்கள். இது உங்கள் தோல்விதான். எங்கள் சக்தி எவ்வளவு என்று அவர்களுக்கு தெரியும் அதனால் தான் கைது செய்யப்பட்டுள்ளோம் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், இந்த மண்ணின் ஒவ்வொரு மகளின் மரியாதையையும் உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை நரேந்திரமோடி மேற்கொள்வார். உங்கள் பயணம் பலத்தால் தடுத்து நிறுத்தப்படும்போது நீங்கள் சரியாக பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். மற்ற கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும்போது ஜனநாயக உரிமையான அமைதியான முறையிலான போராட்டம் நடத்த அனுமதி கேட்கும்போது நாங்கள் தடுக்கப்படுவது ஏன்? என அதிமுக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நான் கேள்வி எழுப்புகிறேன் என்று கூறியுள்ளார்.