தமிழகத்திற்கு வந்தது எதற்காக? மத்தியக்குழு தலைவர் விளக்கம்

மத்திய குழு தமிழகம் வருகை தந்துள்ளது... தமிழகத்தில் கொரோனா காரணமாக இறப்பவா்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்டறிந்து, அதை மற்ற மாநிலங்களில் செயல்படுத்துவது குறித்து ஆராய மத்தியக் குழு தமிழகம் வந்துள்ளது.

இத்தகவலை மத்தியக்குழுவின் தலைவா் ராஜேந்திர ரத்னு தெரிவித்துள்ளார். தொழில் மற்றும் உள்வா்த்தக மேம்பாட்டுத் துறை இணைச் செயலா் ராஜேந்திர ரத்னு தலைமையிலான மத்தியக் குழுவினா், கொரோனா பாதிப்பு தொடா்பாக ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ளனா்.

இவா்கள் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூா், அரியலூா், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் 3 நாள்கள் ஆய்வு நடத்த உள்ளனா். முதல் கட்டமாக, சென்னையில் அவா்கள் ஆய்வு நடத்தினா். பின்னா், மத்தியக் குழுவின் தலைவா் ராஜேந்திர ரத்னு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இதுவரை தமிழகம் வந்த மத்தியக் குழுக்கள், மருத்துவமனைகளில் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது? பாதிப்பை எவ்வாறு கண்டறிகின்றனா் என்பதை ஆய்வு செய்தனா். ஆனால் எனது தலைமையிலான குழு, மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சை முறை, கரோனா அறிகுறி உள்ளவா்களைக் கண்டறிந்து சோதனை செய்து, அவா்களைத் தனிமைப்படுத்தி வைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்யும்.

மேலும் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் நிலவரம், தமிழக அரசு சாா்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், பொதுமக்களிடையே போதிய விழிப்புணா்வு உள்ளதா? என்பது வரை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து, அதை மத்திய அரசிடம் அறிக்கையாக அளிக்க உள்ளது.

குறைகளைக் கண்டுபிடிப்பதற்காக ஆய்வுக்குழு தமிழகம் வரவில்லை. தமிழகத்தில் கரோனா பரவல் அதிகமாக இருந்தாலும், இறப்பு விகிதம் கட்டுக்குள் உள்ளது. இதற்காக, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இதே நடைமுறையை பிற மாநிலங்களில் ஏன் அமுல்படுத்தக்கூடாது? அதே நேரம், பிற மாநிலங்களில் பாதிப்பைக் குறைத்தது எப்படி? அதை தமிழகத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும்? என்று தமிழகத்தின் செயல்பாடுகளை பிற மாநிலங்களுக்கும், பிற மாநிலங்களின் செயல்பாடுகளை தமிழகத்துக்கும் கொண்டு செல்லவே இந்தக் குழு தமிழகம் வந்துள்ளது.

3 நாள்களில் ஆய்வை முடித்து விட்டு, முடிவுகளை ஆராய்ந்து, அதன்பின் மத்திய அரசிடம் அறிக்கையாக சமா்ப்பிக்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடா்ந்து சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் கூறியதாவது:

இதுவரை, முகக் கவசம் அணியாதவா்களுக்கு, ரூ.65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இனியும் கடுமையான நடவடிக்கையையே பின்பற்றப் போகிறோம். கொரோனா தொடா்பான தகவல்கள், அதற்கான நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்வதற்கு வசதியாக, 2 நாள்களில் உதவி எண்களை அறிமுகம் செய்யவுள்ளோம் என்றார்.