தடை செய்யாமல் விட்டது ஏன்? தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய அண்ணாமலை

சென்னை: தரமில்லாத பொங்கல் பரிசு சப்ளை செய்த நிறுவனங்களை தடைசெய்யாதது ஏன் என்று பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தரமில்லாத பொங்கல் பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் ரூ.3.75 கோடி அளவிற்கு அபராதம் விதித்து திமுக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனதால் தவறு செய்த எந்த நிறுவனத்தையும் தடைசெய்யவில்லை.

இதில் 3 நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டிருந்தது. பொருட்களை சப்ளை செய்த அதே 3 நிறுவனங்களுக்கு மறுபடியும் அதே பொருட்களான 4 கோடி லிட்டர் பாமாயிலும், ஒரு லட்சம் டன் பருப்பும் வழங்குவதற்கு மீண்டும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

இது வெறும் பருப்பு மற்றும் பாமாயில் கணக்குதான். இன்னும் மிளகு, புளி, மசாலா பொருட்கள், மளிகை பொருட்கள், என்ற வகையிலே மேலும் சில நூறு கோடிகள் சுருட்டப்பட்டு இருக்கலாம். தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், தரமற்ற பொருளை தந்த அதே நிறுவனத்திற்கு சொற்பத் தொகையை அபராதம் விதித்து, மீண்டும் அதே பொருளை சப்ளை செய்ய ஆர்டர் தருவது, சந்தேகத்திற்கு இடமில்லாத தவறு நடப்பதை வெளிச்சப்படுத்துகிறது.
இந்த ஊழல் வெளிச்சம் தான் விடியல் போல. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.