கொரோனாவுக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை வெளியிடுவதில் பயம் ஏன் - ராகுல் காந்தி கேள்வி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிஎம் கேர்ஸ் பண்ட் மூலம் மத்திய அரசு நிதி திரட்டி வருகிறது.

திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் தொழிலதிபர்கள் என கூலித்தொழிலாளி வரை அனைத்து தரப்பு மக்களும் கொரோனா நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர். இந்நிலையில், பேரிடர் காலங்களில் உதவ பிரதமர் தேசிய நிவாரண நிதி என்ற அமைப்பு இருக்கும்போது எதற்காக பிஎம் கேர்ஸ் பண்ட் அமைப்பு உருவாக்கப்பட்டது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் பிஎம் கேர்ஸ் பண்ட் நிதியை நாடாளுமன்ற குழு ஆய்வு செய்வதற்கு பா.ஜ.க. எம்பிக்கள் முட்டுக்கட்டை போடுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பிஎம் கேர்ஸ் பண்ட் மூலம் நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை வெளியிடுவதில் பிரதமர் ஏன் மிகவும் பயப்படுகிறார். சீன நிறுவனங்களான ஹவாய், ஷியோமி மற்றும் ஒன் பிளஸ் ஆகிய நிறுவனங்கள் நன்கொடை அளித்தது அனைவருக்கும் தெரியும். இருந்தும் அவர் ஏன் விபரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். .