சென்னையில் நேற்றிரவு முதல் பரவலாக பெய்யும் மழை

சென்னையில் நேற்றிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி நேரம் என்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழலே நிலவுகிறது.

இந்நிலையில் தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், நந்தனம், வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், மயிலாப்பூர், சாந்தோம், பட்டினப்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் காலை முதலே பலத்த மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும், கனமழையும், ஒருசில இடங்களில் லேசான் மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.