பேருந்துகள் இயங்கும் 20 சதவீத பயணிகளுடன்; முதல்வர் கெஜ்ரிவால் தகவல்

இருபது சதவீத பயணிகளுடன் பேருந்து சேவைக்கு அனுமதி கொடுத்துள்ளார் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

புதுடில்லியில் ஊரடங்கு காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்தார்.

அதில் டில்லியில் 20 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பேருந்துக்குள் ஏறும் முன்பு பயணிகளுக்கு உடல்வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்றப்படும். கட்டுமானப் பணிகளைத் தொடர அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்போது தில்லியில் இருக்கும் தொழிலாளர்களைக் கொண்டு மட்டுமே இந்த பணிகள் நடைபெற வேண்டும். தனியார் நிறுவனங்கள் முழு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அதே சமயம், பெரும்பாலான தொழிலாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும். சந்தைகள் திறந்திருக்கும். ஆனால், கடைகளுக்கு வழங்கப்பட்ட எண்ணை அடிப்படையாக வைத்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் கடைகள் திறக்கப்படும்.

விளையாட்டரங்குகள் திறக்கப்படும். பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்க அனுமதி இல்லை. மேலும் இரவு 7 மணி முதல் காலை 7 வரை அவசியமின்றி வெளியே வரத் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டில்லியில் இன்றைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,054 ஆகும். இவர்களில் 4485 பேர் குணமடைந்துள்ளனர். 160 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.