உலகிலேயே முதன்முறை... திரவ ஹைட்ரஜனில் இயங்கும் மின்சார விமானம் அறிமுகம்

ஸ்லோவானியா: மின்சார விமானம்... உலகிலேயே முதன்முறையாக திரவ ஹைட்ரஜனில் இயங்கும் மின்சார விமானத்தை, மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவானியாவில் அறிமுகம் செய்துள்ளனர்.

தற்போது மின்சார வாகனங்களின் உற்பத்தி அதிகரித்துவிட்டது. விதவிதமாக மின்சார வாகனங்களை பல நிறுவனங்கள் அறிமுகம் செய்கின்றனர். எதிர்காலத்தில் மின்சார வாகனங்களே இந்த உலகை ஆட்சி செய்யும் எனத் தோன்றுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவை தனது தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும், ‘ஜாவி’ என்ற விமான நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு எச்ஒய்4 என்ற விமான நிறுவனத்தை வாங்கியது. இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முற்றிலும் ஹைட்ரஜனிலேயே இயங்கும் விமானத்தைத் தயாரிப்பதில் அந்த நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், உலகிலேயே முதன்முறையாக முற்றிலும் ஹைட்ரஜனில் இயங்கும் மின்சார வாகனத்தை எச்ஒய் 4 விமான நிறுவனம் ஸ்லோவோனியாவில் அறிமுகம் செய்திருக்கிறது.

இந்த விமானத்தில் ஹைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி 750 கிலோ மீட்டர் தொலைவு வரை பயணிக்க முடியும். இதில் கிரையோஜனிக் திரவ ஹைட்ரஜனைப் பயன்படுத்தினால் 1500 கிலோ மீட்டர் தொலைவு வரை வெறும் 3 மணி நேரத்தில் பயணிக்கலாம் என எச்ஒய் 4 நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகிலேயே முதன்முறையாக திரவ ஹைட்ரஜனில் இயங்கும் முதல் மின்சார வாகனம் இதுதான் என்றும் இந்த நிறுவனம் கூறுகிறது.

இதனால் விமானத்துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த ஹைட்ரஜனை உருவாக்கும் செயல்முறையும் மிகக் கடினமானதுதான். எதிர்காலத்தில் இது எளிதாக இருக்கும்படியான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.