உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.30 கோடியைத் தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 200க்கும் நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.43 கோடியைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9.98 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா, பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. உலகளவில் கொரோனா வேகமாக பரவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை பின்பற்ற வலியுறுத்தப்படுகிறது. இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வந்தாலும், கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.